முக்கிய செய்திகள்

மக்கள் எதிர்பார்க்கும் சமஸ்டி தீர்வு கிடைக்கப் பேவதில்லை

1163

மக்கள் எதிர் பார்க்கும் சமஸ்டி தீர்வு கிடைக்கப் பேவதில்லை எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு -களுவாஞ்சிகுடியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், சமஸ்டி என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக ஒற்றையட்சி அடிப்படையிலான அரசியல் யாப்பே வழங்கப்படவுள்ளது என்பது வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சமஸ்டி தீர்வு கோரியே மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களித்துள்ள நிலையில், இப்போதிருந்தே அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய தேவையுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையும் செய்யாது விட்டால் கடந்த 65 ஆண்டு காலமாக ஏமாற்றப்பட்டது போல், மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்படுவோம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

அத்துடன் தமிழ் மக்களின் சரித்திரத்தில் ஒற்றையாட்சிக்கு எமது ஆதரவை எடுத்துக் கொடுக்கும் நிலமைதான் ஏற்படும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத மூன்று விடயங்கள் பலவந்தமாக வழங்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒற்றையாட்சி முறைமை நீக்கப்படாமை, வடக்கு கிழக்கு இணைக்கப்படாமை மற்றும் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை என்பன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் இவற்றை உள்ளடக்கியதாகவே புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் புதிய அரசியல் யாப்பு அமையும் என்ற நம்பிக்கை இருப்பதாக, அரசியல் யாப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவில் அங்கம் பெற்றுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *