மக்கள் மத்தியில் பதற்றத்தையும், கிளர்ச்சியையும் தூண்டும் விதத்தில், தொல்பொருள் துறை செயற்படுவதை தவிர்க்க வேண்டும் என்று, இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடம், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுடன் நேற்று தொலைபேசியில் உரையாடிய, மாவை சேனாதிராஜா, நிலாவரை பகுதியில் திடீரென தொல்லியல் துறையினர், மற்றும் சிறிலங்கா இராணுவத்தினர் அகழ்வாராய்ச்சிகளை நடத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் அவரது கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
இந்த செயற்பாடானது மக்கள் மத்தியில் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், பதற்றமான சூழல்களை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ள மாவை சேனாதிராஜா, குருந்தூர் மலை விடயம் தொடர்பாகவும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் தொல்லியத்துறை சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் இருக்கும்போது, சிங்களவர்களை மட்டும் பயன்படுத்தி நிலங்களை ஆக்கிரமிக்கும் வகையிலான செயற்பாடுகளை உடன் நிறுத்துமாறும், அவர் கோரியுள்ளார்.
அதற்கு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, எதிர்காலத்தில் யாழ். பல்கலைக்கழக தரப்பினரையும் ஆய்வுகளில் உள்ளீர்ப்பதாக உறுதியளித்ததுடன், இனம், மதத்தின் பெயரால் தொல்லியல்துறை செயற்படவில்லை என்றும் பதிலளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.