முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் விகாராதிபதியின் அடாவடித்தனத்தினால் பதற்ற நிலை!

927

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பயணத்தை இன்று சனிக்கிழமை மேற்கொண்ட பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரோ உட்பட அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மாவட்டத்தின் வடக்கு எல்லையில் காவல்த்துறையினரால் தடுக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நகரிலும் ஏனைய ஒரு சில இடங்களிலும் ஆர்பாட்டங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், பொது பல சேனாவின் செயலாளர் உட்பட அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மாவட்டத்திற்குள் பிரவேசிப்பதற்கு காவல்த்துறையினர் ஏற்கனவே நீதிமன்ற தடை உத்தரவு பெற்றிருந்த நிலையிலேயெ அவர்கள் தடுக்க்பபட்டுள்ளனர்.

எனினும் அவர்கள் காவல்த்துறையினரின் தடையையும் மீறி செல்ல முற்பட்டதாகவும்,
ஆத்திரமுற்ற பௌத்த பிக்குகள் உட்பட பொது பல சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் புனானைக்கும் வெலிக்கந்தைக்கும் இடையிலான தொடருந்து பாதையில் அமர்ந்து கொண்டமையால், மட்டக்களப்புக்கும் கொழும்புக்குமிடையிலான தொடருந்துச் சேவைகள் நண்பகலுக்கு பின்னர் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அந்த இடத்தில் சில மணிநேரங்கள் பதட்டமான நிலை காணப்பட்டதாவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே பொது பல சேனாவின் வருகைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் அறிந்த மட்டக்களப்பு நகர் மங்களராமய விகாரையின் தலைமை குருவான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், விகாரையிலிருந்து சில பௌத்த பிக்குமார்கள் மற்றும் சில சிங்கள மக்கள் சகிதம் நகர வீதிகளில் பேரணியாக சென்ற போது அவரை காவல்த்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அதேவேளை வீதிகளில் காணப்பட்ட பொதுமக்கள் பௌத்த பிக்குவிற்கு எதிராக கூக்குரல் எழுப்பியதால் அந்த இடத்தில் பதட்ட நிலை தொடர்ந்தமையால் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் அங்கு விரைந்துள்ளனர்.

ஏற்கனவே கலகத் தடுப்பு காவல்த்துறையினரின் உதவியும் நாடப்பட்டிருந்த நிலையில், இவ்வாறான சூழ்நிலைகளின் பின்னர் சிறப்பு அதிரடிப் படையினரும் அந்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *