முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மங்களாராமைய விகாராதிபதிக்கு எதிராக முறைப்பாடு

1116

மட்டக்களப்பு மங்களாராமைய விகாராதிபதியினால், மட்டக்களப்பு கெவலியாமடு பகுதியில், கடுமையாக பயமுறுத்தலுக்கும், நிந்தனைக்கும் உள்ளாகிய கச்சைக்கொடி கிராம சேவகர் சிதம்பரநாதன் ஜீவிதன், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனிடமும், மனித உரிமை ஆணைக்குழுவிலும் இன்று முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

குறித்த கிராம சேவையாளர் தம்மிடம் செய்துள்ள முறைப்பாட்டை அடுத்து அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்த் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், கிராம சேவகர் சிதம்பரநாதன் ஜீவிதனுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும்படி சட்ட ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் சாகல ரத்னாயக்கவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும், அதேபோல் கிராம சேவகர்களின் கடமைக்கு பொறுப்பான உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கும் இது தொடர்பில் அறிவித்துள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இந்தப் பிரச்சினை தொடர்பிலும், நாட்டில் இன்று தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக எழுந்துள்ள பொதுவான பேரினவாத கருத்தோட்டம் தொடர்பிலும் இன்று இரவு, சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் சந்திக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் நேற்று மாலை சோபித தேரரின் பெயரில் இயங்கி வரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தை சார்ந்த சிங்கள முற்போக்கு சிவில் சமூக பிரதிநிதிகளுடனான முதல்கட்ட சந்திப்பு இடம்பெற்றதாகவும்,
பெருகி வரும் இனவாதம் தொடர்பில் காத்திரமான நிலைபாட்டை இந்த வார இறுதியில் வெளிப்படுத்துவதாக சமூக நீதிக்கான தேசிய இயக்க தலைவர் சரத் விஜெசூரிய தம்மிடம் உறுதியளித்துள்ளார் என்றும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.

நாட்டில் இனப்பிரச்சினையை ஏற்படுத்தி, அதில் அரசியல் இலாபம் பெறுவதற்கு பொது எதிரணி இன்று தயாராக இருக்கின்றது என்றும், பொது எதிரணி என கூறப்படும் பிரிவினரின் மிக முக்கியமான தலைவர், சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மங்களாராமைய விகாரைக்கு சென்று விகாராதிபதியிடம் கலந்துரையாடியுள்ள பின்னரே, குறித்த இந்த இனவாத கூச்சல் மட்டக்களப்பில் நடந்தேறியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று செங்கலடி பன்குடாவெளியில் இந்த குறிப்பிட்ட மங்களாராமைய தேரர் முன்னெடுத்த அத்துமீறிய நடவடிக்கைக்கு எதிராக காவல்த்துறையால் நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ள மனோ கணேசன், இந்தநிலையில் பொதுவாகவும், சமூக ஊடகங்களிலும் கருத்துகள் தெரிவிக்கும்போது, தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்களும், ஏனையோரும் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்றம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டு வரும் தூரதிஷ்டவசமான வரலாறு என்பதை மனத்தில் கொண்டு, பொறுப்புடன் செயற்படும் அதேவேளை, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அமைச்சர் என்ற முறையில் காத்திரமான மாற்று நடவடிக்கைகளையும் பொறுப்புடன் எடுத்து, நிலைமைகளை தாம் கையாண்டு வருவதாகவும் அவர் விபரித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *