முக்கிய செய்திகள்

மத்திய அமெரிக்க குடியேறிகளுக்கு உள்ள சட்டரீதியான பாதுகாப்பை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

405

மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவிற்கு வரும் மத்திய அமெரிக்க குடியேறிகளுக்கு உள்ள சட்டரீதியான பாதுகாப்பை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அகதிகள் எந்த நாடு வழியாக வந்தாலும் அவர்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கோர சட்டரீதியாக உரிமை உள்ளது. இந்த சட்டத்தின் கீழ் பாதுகாப்பானது என்று கருதப்படும் நாடு வழியாக வரும் அகதிகள் இந்த உரிமையை கோர முடியாது.
இந்நிலையில் திங்கள்கிழமை டிரம்ப் நிர்வகம் வெளியிட்ட புதிய விதிமுறையின் படி மற்ற நாடுகள் வழியாக அமெரிக்காவில் நுழையும் அகதிகள் அமெரிக்காவில் அடைக்கலம் கோர முடியாது. செவ்வாய்க்கிழமை முதல் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது.

அமெரிக்காவிற்கு கடத்தப்படுவோர் மற்றும் குடியேறிகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகள் வழியாக வரும் அகதிகளுக்கு மட்டும் இந்த விதிமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அகதிகளிடம் நடக்கும் ஆரம்பக்கட்ட விசாரணையின் போதும் இந்த புதிய விதிமுறை நடைமுறைப்படுத்தப்படும். இந்த விசாரணையில் அகதிகள் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பதை நினைத்து ஏன் பயப்படுகிறார்கள் என்பதை நம்பகமான காரணங்களை கூறி நிரூபிக்க வேண்டும்.

புதிதாக அமெரிக்காவிற்கு வரும் அகதிகளுக்கு மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும். ஏற்கெனவே அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணை மற்றும் இறுதிகட்ட விசாரணை இடையே உள்ள இடைவெளியை நீக்க இந்த மாற்றம் அமல்படுத்தப்படுவதாக டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய விதிமுறையை அமல்படுத்துவதன் மூலம் அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு வருவோருக்கு உள்ள சட்டரீதியான பாதுகாப்பை முடிவுக்கு கொண்டு வருவதே அதிபர் டொனால்ட் டிரம்பின் நோக்கம். இதன் மூலம் அமெரிக்காவில் அகதிகளின் எண்ணிக்கையை குறைக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த புதிய விதிமுறைக்கு குடியேறிகள் நல அமைப்பினர், மத தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவை விட்டு அகதிகளை விரட்ட டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள கொடூரமான நடவடிக்கை இது என குற்றம்சாட்டியுள்ளனர்.

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த புதிய விதிமுறைக்கு எதிராக வழக்குகள் தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடியேறிகள் தொடர்பாக டிரம்ப் எடுத்த பல நடவடிக்கைகளுக்கு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *