முக்கிய செய்திகள்

மன்னகுளம் பகுதியில் பெளத்த வழிபாடு இடம்பெற்றமைக்கான சான்றுகள்; தொல்லியல் திணைக்களம்

1137

வவுனியா வடக்கில், மன்னகுளம் பகுதியில் பெளத்த வழிபாடு இடம்பெற்றமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக சிறிலங்கா தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பழைய செங்கல் இடிபாடுகளுடன் கூடிய பௌத்த வழிபாட்டு அடையாளங்கள் குறித்த பகுதியில் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மன்னகுளம் பகுதியில் தொல்பொருள் சின்னங்கள் கொண்ட தளமொன்று உள்ளதாக  சிறிலங்கா இராணுவத்தின் 16 ஆவது சிங்கப் படைப்பிரிவின்  கட்டளை அதிகாரி தொல்பொருள் திணைக்களத்திற்கு அறிவித்திருந்தார்.

இதையடுத்து, வவுனியா தொல்பொருள் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் 60 தொடக்கம் 70 சென்றிமீற்றர் உயரத்திற்கு இடைப்பட்ட 12 கற் தூண்களைக் கொண்ட கட்டட அமைப்பு இருப்பதாகவும் அதில், சிங்கள எழுத்துக்களால் பூசை தொடர்பாக எழுதப்பட்டுள்ளதாகவும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அத்துடன், இந்த தொல்பொருள் அடையாளம் கி.மு எட்டு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கு உரியது எனவும், அங்கு பழைய கட்டடங்களுக்கான செங்கல், ஒடுகள் இருப்பதாகவும், இக்கட்டடம் 50 சதுரமீற்றர் பரப்பளவைக் கொண்டதாக இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை போன்ற தமிழரின் பூர்வீக நிலப்பரப்புகளில், புராதன பௌத்த விகாரைகள் இருந்ததாக கூறி, குறித்த பகுதிகளில் விகாரைகளை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மன்னகுளம் பிரதேசமும், நில ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *