முக்கிய செய்திகள்

மன்னார் புதைகுழியில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுவரும் நிலையில், அகழ்வுப் பணிகளை முடக்கிவிடுவதற்கு இலங்கை அரசு முயல்வதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது

622

மன்னாரிலுள்ள புதிய மனிதப்புதைகுழியில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உட்பட குறைந்தபட்சம் முப்பது நபர்களை கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சதோச பல்பொருள் விற்பனைத்தளத்தில் பதினைந்து நாட்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது இதனை கண்டறிந்துள்ளதாக, தடயவியல் அதிகாரிகள் மற்றும் மரபணுவியல் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதனிடையே இந்த அகழ்வுப் பணிகளுக்காக இலங்கை அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்காமையினால் அகழ்வாராய்ச்சிகள் நிறுத்தப்படலாம் என்று அஞ்சப்படுகின்றது.

போர் இடம்பெற்ற பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்தோர் மற்றும் காணாமல் போனோரது உடல வன்கூடுகளே இதுவென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன், இவை சித்திரவதை மற்றும் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களுடையதாகவே இருக்கலாமென கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த திங்கள் கிழமை மன்னார் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பில், எதிர்காலத்தில் அத்தியாவசிய உதவிகளை வழங்குவதற்கு அரசாங்க அதிகாரிகள் தவறிவிட்டால் அகழ்வாராய்ச்சியினை கைவிடுவதை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட நீதிபதி பிரபாகரனால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தச் சந்திப்பில், பிரதான விசாரணை நீதித்துறை மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச மற்றும் மரபணுவியல் நிபுணரான ராஜ் சோமதேவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விசாரணைகளில் ஈடுபட்டுள்ள வல்லுநர்கள் அரசாங்க அதிகாரிகள் இதுவரை நீதிமன்றத்தில் இருந்து 300 கிலோமீட்டர் தூரத்திலுள்ள இடங்களிலிருந்து பயணித்தே மன்னார் வருகின்றனர் எனவும், நீதித்துறையானது மருத்துவ அதிகாரிகள், மரபணு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தடயவியல் ஆய்வாளர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதாக கூறுகின்ற போதிலும், கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளிலிருந்து மன்னாருக்கு பயணிப்பவர்களுக்கான விடுதி மற்றும் போக்குவரத்து என்பவற்றை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று நீதிபதி தங்களுக்குத் தெரிவித்துள்ளதாக பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்துள்ளார்.

தான் சுகாதார துறையில் வேலை செய்தாலும் விசாரணை கட்டளைகள் நீதிமன்றத்தாலேயே வழங்கப்படுகிறன எனவும், எனவே வசதிகள் வழங்குவதற்கு நீதி அமைச்சினை கேட்டுக் கொண்ட போதிலும், தனக்கு பதில் இல்லை என்றும், எல்லோரும் பிரச்சினையை காட்டி தப்பி வருகிறார்களெனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனிடையே ஆய்வை தொடர்வதற்கு உள்ளூர் மனித உரிமை வழக்கறிஞர் ஒருவர் நிதி ஒதுக்கி வழங்க கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அரசு நிறுவனங்கள் அல்லாத நன்கொடைகளை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர் எனவும், குறிப்பாக மன்னார் ஆயர் இல்லமும், பல குருமார்களும் தேவையான நிதி மற்றும் வசதிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ள போதிலும், அவை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே எந்தவொரு உள்ளூர் அல்லது அனைத்துலக அரசு சாரா நிறுவனங்களாலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டால், அவர்களின் விருப்புக்கு ஏற்றவாறான அறிக்கையை தயாரிப்போம் என்று தாங்கள் குற்றம் சாட்டப்படுவோம் எனவும், எனவே நிதியேற்பாட்டை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயங்கினால், ஆய்வினை கைவிடுவதை விட வேறு வழி இல்லையெனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *