மன்னார் புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளோர் கடுமையான சித்திரவதையின் மூலம் கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது

570

மன்னாரில் அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பாரிய மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 53 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளநிலையில், அவர்கள் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டோ தாக்கப்பட்டோ கொல்லப்பட்டிருக்கலாமென சட்ட மருத்துவ அதிகாரி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மன்னார் நகர நுழைவாயிலில், பழைய சதோச கட்டடம் இருந்த பகுதியில், மன்னார் நீதிவான் பிரபாகரன் முன்னிலையில் இந்த அகழ்வுப் பணி கடந்த 41 நாட்களுக்கு மேலாக இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று வரை 53 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் 34 எலும்புக்கூடுகள் முத்திரையிடப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட மருத்துவ அதிகாரி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும் இதுவரை மீட்கப்பட்ட எந்தவொரு மனித எலும்புக்கூட்டு தொகுதியிலும் துப்பாக்கி ரவை காயங்கள் காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ள நிலையில், இதனால் அனைவரும் சித்திரவதைகளின் பின்னர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் பலவற்றில் கூரிய ஆயுதத்தால் பலமாக தாக்கப்பட்டமையால் ஏற்பட்ட முறிவுகளை காணக்கூடியதாக இருப்பதாக அகழ்வில் ஈடுபட்ட நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அதேபோன்று புதைகுழி சீரற்று இருப்பதால் அவசர அவசரமாக கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வழமையான கிரியைகளின் பின்னர் புதைக்கப்பட்டவர்களது புதைகுழி போன்றல்லாது ஒன்றாக கொல்லப்பட்ட அனைவரும் புதைக்கப்பட்டுள்ளதாகவும், உடல்கள் ஒழுங்கற்ற வகையில் அவசர அவசரமாக புதைக்கப்பட்டுள்ளமை ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது என்றும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 5 சிறு பிள்ளைகளின் எலும்புக்கூடுகளும் இருந்தன என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ள போதிலும், குறித்த புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்களின் அடிப்படையில் படுகொலையானவர்கள் கொல்லப்பட்ட காலப்பகுதி பற்றிய தகவலை வெளியிட ஆய்வாளர்கள் பின்னடித்துவருகின்றனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *