முக்கிய செய்திகள்

மன்னார் மனித புதைகுழியில் காணப்படும் உடலங்களில் ஆடைகள் இருந்ததற்கான தடயங்கள் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது

666

மன்னார் மனித புதைகுழியில் காணப்படும் உடலங்களில் ஆடைகள் இருந்ததற்கான தடயங்கள் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளபட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் நேற்று புதன் கிழமை 79 ஆவது தடவையாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட நீதவான் சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

பல்வேறு கேள்விகள் சந்தோகங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில், நேற்று புதன்கிழமை அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

குறித்த உரையாடலின் போதே, இதுவரை 151 மனித எச்சங்கள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாகவும், அதிலும் 144 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான மழை பெய்வதனால் அகழ்வு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் காணப்படுவதாகவும், அதனால் குறித்த வளாகம் முழுவதையும் மூட வேண்டிய தேவை இருப்பதனால் அந்த ஏற்பாடுகள் தொடர்பாக தெரியபடுத்தியுள்ளதாகவும், உள்ளூர் உற்பத்தி பொருட்களின் மூலம் பாதுகாப்பான முறையில் குறித்த வளாகத்தை மூட முடியாத நிலை காணப்படுவதாகவும், அதனால் வெளி நாடுகளில் இருந்து குறித்த பொருளை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் இடம் பெறுவதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதேநேரத்தில் ஊடகவியலாளர்களால் குறித்த வளாகத்தில் இருந்து ஆடைகளுடன் சம்மந்தப்பட்ட ஏதேனும் தடயப் பொருட்கள் கிடைத்தனவா என்று வினவப்பட்டபோது அதற்கு பதிலளித்த சட்ட வைத்திய அதிகாரி, இதுவரை ஆடைகளுடன் சம்மந்தப்பட்ட எந்த ஒரு தடய பொருட்களும் அடையாளப்படுத்தபடவில்லை எனவும், ஆனாலும் அடையாளபடுத்த முடியாத நிலையில் சில தடய பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் குறிப்பிட பொருட்கள் இவ்வகையை சேர்ந்தவை என்பது தொடர்பான துல்லியமான தகவல் அறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் நேற்று மன்னார் மனித புதைகுழியை பார்வையிடுவதற்காக இலங்கைக்கான அமெரிக்கா தூதரகத்தில் இருந்து அதிகாரி ஒருவர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *