முக்கிய செய்திகள்

மன்னார் மனித புதைகுழி அகழ்வின்போது தலையில் வெட்டு தழும்புடன் மண்டையோடு மீட்கப்பட்டுள்ளது

825

மன்னார் சதோச வளாகத்தில் தொடர்ச்சியாக சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மற்றும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருவதுடன், மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும் தொடர்ச்சியாக புதிய மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இன்று வியாழக்கிழமை 66 வது தடவையாக குறித்த வளாகத்தில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதுவரை 120 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன் 114 மனித எலும்புக்கூடுகள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் அகழ்வு பணியின் போதும் புதிதாக மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்படுவதனால் அப்புறப்படுத்தும் பணிகளை முழுவதுமாக முடிப்பதில் தாமதம் காணப்படுகின்றது.

இந்த நிலையில் நேற்று புதன் கிழமை பணிகளின் இறுதி நேரத்தில் மண்டையோடு ஒன்றின் பகுதியில் வெட்டு தழும்பு ஒன்று காணப்பட்டது அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த வெட்டு தழும்புடன் உள்ள மண்டையோட்டின் வெட்டானது பிரேத பரிசோதனையின் போது ஏற்பட்டதா அல்லது கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டபோது ஏற்பட்டதா அல்லது வேறு விதமாக ஏற்பட்டதா என்பது தொடர்பான விடயங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *