மன்னார் மாந்தை உப்பு உற்பத்தி கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கை இடம் பெறாது – றிஸாட்

978

மன்னார் மாந்தை உப்பு உற்பத்தி கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கை இடம் பெறாது என்று அமைச்சர் றிஸாட் பதியுதீன் வடமாகாண முதலமைச்சரிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இதன்போது அதில் கலந்துகொள்ளச் சென்ற இணைத் தலைவர்களிடம் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினர், மாவட்டச் செயலக நுழைவாயிலில் வைத்து உப்பு உற்பத்தி கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்து விவகாரம் தொடர்பில் மனுக்களை கையளித்திருந்தனர்.

அந்த மனுவில் வட பகுதியில் பிரதான வழங்களாக இருக்கின்ற ‘மாந்தை சோல்ட் லிமிற்றெற்’ கீழ் இருக்கின்ற மன்னார், ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பு உற்பத்தி கூட்டுத்தாபனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையினை உடனடியாக இரத்துச் செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த மனு இணைத்தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களிடமும் இன்று காலையில் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாந்தை உப்பு உற்பத்தி கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையை உடன் நிறுத்த வேண்டும் என்று இன்றைய மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.

மத்திய அரசாங்கம் இந்த விடையத்தில் தீர்மானத்தை எடுப்பதினால் எவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலமைச்சரின் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பதிலளித்த அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களின் ஒருவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன், மாந்தை உப்பு உற்பத்தி கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கை இடம் பெறாது என்று முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

அத்துடன் குறித்த உப்பளத்தை அபிவிருத்தி செய்து அதன் விளைச்சலை மேலும் அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *