மருத்துவ உதவியைப் பெறுவதற்கு முன்னரே, கொரோனா தொற்றாளர்கள் துரிதமாக உடல்நிலை மோசமடைந்து இறந்து கொண்டிருக்கும் புதிய போக்கு உருவாகியுள்ளதாக ஒன்ராறியோ மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஒன்ராறியோ சுகாதார அதிகாரிகள் தீவிரமான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மருத்துவமனைக்கு வெளியே, சமூகத்தில் ஒரு தொகை மக்கள் இறந்து கொண்டிருப்பதை நாங்கள் காண்கிறோம், இது புதிய, கெடுவாய்ப்பான, துக்க கரமான விடயம் என்று மருத்துவர் டிர்க் ஹூயெர் (Dirk Huyer) குயின்ஸ் பார்க்கில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இவர்களால், சுகாதார சேவையைப் பெற முடியவில்லை, அதற்கு முன்னரே, நோய் அவர்களை விரைவாகவும் தீவிரமாகவும் பாதித்து, சமூகத்தில் இறப்புகளுக்கு வழிவகுத்துள்ளது.
இதற்கு முந்திய அலைகளில் இவ்வாறான நிலையை நாங்கள் காணவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இரண்டு வாரங்களுக்கு முன்னர் 15 ஆக இருந்த சராசரி நாளொன்றுக்கான மரணம், கடந்த வாரம் 22 ஆகவும், இந்த வாரம், 27 ஆகவும் அதிகரித்துள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன.