முக்கிய செய்திகள்

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் அதிருப்தியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

336

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு இலங்கை அரசர்ஙகம் எடுத்துள்ள முடிவு குறித்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தமது அதிருப்தியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகளாவிய ரீதியாக மரண தண்டனைக்கு எதிராக கடைப்பிடிக்கும் பொதுவான நிலைப்பாட்டுக்கு அமைய, கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதரகங்கள் இந்த அதிருப்தியை வெளிப்படுத்தவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எங்கெல்லாம் மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அதனை நிறுத்துமாறு அரசாங்கத்தை கோருவோம் என்று அந்த வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

உலகளாவிய ரீதியாக மரண தண்டனைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை வாக்களித்தது என்பதுடன், இலங்கை ஒரு ஐரோப்பியா நாடாக இருந்தால், இவ்வாறான முடிவு காரணமாக அது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக முடியாது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியமும், அதன் உறுப்பு நாடுகளும் உலகம் முழுவதும் பரப்புரை செய்து வருகின்ற நிலையில், இந்த விடயத்தை மிக விரைவில் இலங்கை அரசாங்கத்திடம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதரகங்கள் கொண்டு செல்லும் என்றும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டே போதைப்பொருள் வணிகத்தில் சிலர் ஈடுபடுவது கண்டறியப்பட்டதை அடுத்து, போதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை வழங்கப்பட்டவர்களுக்கு தண்டனையை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒரு கட்டமாக போதைப் பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 18 பேரின் விபரங்கள், கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை சிறைச்சாலை திணைக்களத்தினால் நீதியமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவர்களை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்ற போதிலும், இவர்களில் பலர் தமது தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதனால், தண்டனையை நிறைவேற்ற முடியாத நிலை இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மரண தண்டனை விதிக்கப்பட்ட 1,240 பேர் இலங்கையின் பல்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், இவர்களில் 874 பேர் தமது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *