முக்கிய செய்திகள்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு கனடியத் தமிழ் வானொலியின் கண்ணீர் வணக்கம்

1843

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு மண்ணையும் மனங்களையும் நேசிக்கும் கனடியத் தமிழ் வானொலியின் கண்ணீர் வணக்கம்.

jayalalitha-1

தமிழக முதல்வருக்கு கண்ணீர் வணக்கம்…….

மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் 05.12.2016 அன்று இயற்கை எய்தினார் எனும் செய்தி உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் மனதில் ஆறாத் துயரினை தந்துள்ளது.

தன்னுடைய திறமை, ஆற்றல், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, பன்மொழித் திறமை மற்றும் ஆழுமையினால் திரைத்துறையிலும், அரசியலிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர். மறைந்த ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க எனும் மாபெரும் அரசியல் இயக்கத்தை அவரின் மறைவின் பின்னர் பல தடைகளைத் தாண்டி தமிழக அரசியலில் மாத்திரமன்றி இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் வலுவாக மாற்றிய பெருமை மறைந்த தமிழக முதல்வரையே சாரும்.

2009 இல் ஈழத்தில் இடம்பெற்ற இந்த நூற்றாண்டின் மாபெரும் இனச்சுத்திகரிப்புக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுத்ததோடு மாத்திரம் நின்றுவிடாது, தமிழக சட்டமன்றத்தில் ஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதனையும் அதற்கான தீர்வாக தனித்தமிழீழம் அமைவதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் எனவும், அனைத்துலக போர் குற்ற விசாரணையொன்று இடம்பெற வேண்டும் எனவும் ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஈழத்தமிழர்கள் மனதில் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்ற பெருமையும் மறைந்த தமிழக முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களையே சாரும்.

jayalaitha-2

தனித்தமிழீழத்தை அடைய இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை மாற்றப்பட வேண்டும் என்பதிலும், இலங்கை இனப்படுகொலை இராணுவத்திற்கு தமிழகத்தில் பயிற்சியளிக்க இடமளிக்கப்படமாட்டாது என்பதிலும் இறுதிவரை உறுதியோடு இருந்தவர் மறைந்த தமிழக முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவிக்கும் ஏழு தமிழர்களை விடுவிக்க துரித நடவடிக்கை எடுத்ததோடு அன்றி தன் அரசின் மூலம் அதற்கான நீதியை நிலை நாட்ட நீதிமன்றம் வரை சென்று இறுதிவரை போராடியவர் மறைந்த தமிழக முதல்வர் அவர்கள்.

முன்னாள் தமிழக முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் மறைவால் ஆறாத் துயருற்றிருக்கும் உலகெங்கும் வாழும் தமிழர்களோடும், அ.இ.அ.தி.மு.க தொண்டர்களோடும், குறிப்பாக தமிழக மக்களோடும், மண்ணையும் மனங்களையும் நேசிக்கும் கனடியத் தமிழ் வானொலி தனது துயரினை பகிர்ந்து கொள்கிறது.

கனடியத் தமிழ் வானொலி
கனடா
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *