மலையக தமிழ் இனத்தின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு கைகொடுக்க அனைத்துலக சமூகம் முன்வர வேண்டும்

999

மலையக தமிழ் இனத்தின் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களுக்கு கைக்கொடுக்க அனைத்துலக சமூகம் முன்வர வேண்டும் என்று  தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்த வேண்டும் என்று, இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியாவிடம் கோரவுள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

சனநாயக இளைஞர் இணைய வாராந்த கருத்தரங்கில் உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ள மனோ கணேசன், ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியாவை, தமிழ் முற்போக்கு கூட்டணியினர் அடுத்த வாரம் சந்திக்கவுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

அந்த சந்திப்பின்போது மலையக தமிழ் இனத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவான தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பிலும், பின் தங்கிய பிரிவினர் என்ற முறையில் அவர்களை கைதூக்கிவிட வேண்டிய சிறப்பு ஒதுக்கீடுகளை வழங்க ஐக்கிய நாடுகள் சபை அனைத்துலக சமூகத்தையும், இலங்கை அரசையும் வலியுறுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசுக்குள் இருந்து நாமும், வெளியில் இருந்து ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தும் போதுதான் இலங்கையில் காரியம் நடக்கும் என்பது தனக்கு நன்றாக தெரியும் என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *