முக்கிய செய்திகள்

மலையக மக்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் பூரண ஆதரவை வழங்குவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு

1191

1000 ரூபாய் நாள் சம்பளம் வேண்டியும், 6 நாள் வேலைக் கிழமையை உறுதிப்படுத்த வேண்டியும், 18 மாதங்களாக நிலுவையிலிருக்கும் சம்பளத்தொகையை வேண்டியும் கடந்த 14 நாட்களாக மலையகமெங்கும் போராடிவரும் மலையக மக்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும், அவர்களுக்கு ஆதரவாக வடக்கு கிழக்கில் நடைபெற்றுவரும் கவனயீர்ப்பு போராட்டங்களுக்கும் பூரண ஆதரவை வழங்குவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

ஆண்டாண்டு காலமாக மலையக தோட்டத்தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்பட்டே இலங்கையின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டாலும், அவர்களின் நியாயமான சம்பளக் கோரிக்கைகளும், சமூக பொருளாதார அபிலாசைகளும் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவது வேதனையளிக்கின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்துக்கும் மலையக தொழிற்சங்கங்களுக்கும் இடையே, சம்பள விவகாரம் உள்ளடங்கலாக, கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவைடைந்த நிலையில், தோட்டத் தொழிலாளர்கள் சொல்லொனா துயரங்களை அனுபவித்து வருவதை தாம் அறிந்துள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

காலாவதியாகி 18 மாதங்கள் ஆன நிலையிலும் இந்தக் கூட்டு ஒப்பந்தத்தின் புதுப்பித்தலில் காணப்படும் இழுபறி நிலை வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் அது தெரிவித்துள்ளது.

மலையக தோட்டத்தொழிலார்களின் உழைப்பிற்கேற்ப அவர்களின் அடிப்படை சம்பளம் ரூபாய் 1000 ஆக உறுதிப்படுத்தப்பட்டு, அவர்களின் ஏனைய கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, போராட்டம் வெற்றி காண்பதற்கான வாழ்த்துக்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ளது.

அத்துடன் மலையக மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் எந்த போராட்டக்களத்திலும் தாம் பின்தொடர்ந்து தமது முழு ஆதரவையும் வழங்க தயாராகவுள்ளதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேலும் தெரிவித்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *