முக்கிய செய்திகள்

மாகாண சபை தொகுதிகள் எல்லை நிர்ணய அறிக்கை இலங்கை நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டுள்ளது

1345

மாகாண சபைத் தேர்தல் எல்லை மீள்நிர்ணய அறிக்கை இன்று இலங்கை நாடாளுமன்றில் ஏகமனதாக தோற்கடிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை இன்று விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு மாலை 6 மணியளவில் வாக்கெடுப்பிற்கு உட்படுத்தப்பட்ட வேளையில், அறிக்கைக்கு ஆதரவாக எவரும் வாக்களிக்கவில்லை என்பதுடன், எதிராக 139 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசிய முன்னணி, சிறிலங்கா சுதந்திர முன்னணி, கூட்டு எதிர்க்கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன இன்று மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களித்துள்ள நிலையில், மக்கள் விடுதலை முன்னணி இன்றைய வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

அத்துடன் மாகாண சபைத் தேர்தல் எல்லை நிர்ணயம் தொடர்பான குழுவின் அறிக்கை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய சிறுபான்மைக் கட்சிகள், மாகாண சபை தேர்தல் தொடர்பான புதிய தேர்தல் முறைமைக்கு கூட்டாக எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.

மலையக மக்களின் பிரதிநிதித்துவம் பறிக்கப்பட்டபோது ஏற்பட்ட பாதிப்பினை ஒத்த விளைவை புதிய தேர்தல் முறைமை மூலம் சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ள நேரிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதிய தேர்தல் முறைமையின் மூலம் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள ஒரேயொரு தீர்வையும் நெருக்கடிக்குள் தள்ள முடியாது என்று அமைச்சர் மனோ கணேசன் இந்த விவாதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் புதிய தேர்தல் முறைமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், புதிய தேர்தல் முறைமையானது சிறுபான்மையினருக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதுடன், முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவத்தை பெருமளவு குறைத்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதாவது கண்டி தேர்தல் மாவட்டத்தில் தற்போது ஐந்தாக உள்ள முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம், புதிய தேர்தல் முறைமையின் ஊடாக ஒன்றாக குறைவடையும் என்று ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை புதிய தேர்தல் முறைமையானது மாகாண சபையை மேலும் வலுவிலக்கச் செய்யும் என்று இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த் குமார், சிறுபான்மையினர்கள் நாடாளுமன்றத்திலும், மாகாண சபையிலும் தற்போது இருக்கும் பிரதிநிதித்துவத்தை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *