முக்கிய செய்திகள்

மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் தவறிழைத்துள்ளனர் – காவல்துறை மா அதிபர்

958

பல்கலைக்கழக மாணவர்கள் மீது யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட சம்பவத்தில்  காவல்துறை அதிகாரிகள் பல தவறுகளை இழைத்திருப்பதாக  காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், எந்தக் கொள்ளையோ, திட்டமிட்ட தாக்குதலோ, உயிர் அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய சூழலோ, அந்த தருணத்தில் இல்லாத நிலையில், எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது தெளிவாகவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் பற்றி உடனடியாக அறிக்கையிடுவதற்கு அதிகாரிகள் தவறியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இது மிகப் பெரிய தவறு என்பதுடன், இது தெளிவான ஒழுக்க மீறல் என்றும் விபரித்துள்ளார்.

இரண்டு மாணவர்களின் உயிர்களின் பெறுமதியையும், இந்தச் சமபவம் பெற்றோருக்கு ஏற்படுத்தும் வலியையும் தான் உணர்வதாகவும், இது ஒரு சோகமான நிகழ்வு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஓடும் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரமில்லை என்று தேசிய காவல்துறை ஆணையச்செயலர் ஆரியதாச குரே வெளியிட்டுள்ள கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்றே நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சூழ்நிலைகளின் அடிப்படையில் குறைந்தபட்ச அல்லது தேவையான அளவு பலத்தைப் பிரயோகிக்க காவல்துறையினருக்கு அதிகாரம் உள்ளதுடன், காவல்துறை கட்டளைச் சட்டத்தின் 53 ஆவது பிரிவு, குறைந்தபட்ச மற்றும் தேவையான பலத்தைப் பிரயோகிப்பதற்கான சூழ்நிலைகள் குறித்து விபரிக்கிறது என்பதுடன், குற்றவியல் சட்டக்கோவையிலும், இதுபற்றிய வழிகாட்டுதல்கள் உள்ளன என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *