முக்கிய செய்திகள்

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

1162

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

பிற்பகல் 05.30 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில் அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில், மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் திருவுருவப் படத்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர் மாலை அணிவித்தார்.

நினைவுச் சுடரினை நல்லூர்த் தொகுதி வேட்பாளர் வாசுகி சுதாகர் ஏற்றிவைத்ததனைத் தொடர்ந்து மலர் வணக்கமும் நினைவுரைகளும் இடம்பெற்றன.

இதேவேளை படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு இன்று மட்டக்களப்பிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்தில் இளைஞர் அணியின் தலைவர் சேயோன் தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா மற்றும் அரியநேத்திரனால் ஜோசப் பரராஜசிங்கத்தின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும், மௌன வணக்கமும் செலுத்தப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், வியாளேந்திரன், சிறிநேசன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அமரரின் குடும்பத்தினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *