முக்கிய செய்திகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் தமிழர்களின் உரிமையை யாராலும் தடுக்க முடியாது!

1158

மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது தமிழர்களின் உரிமை எனவும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் வடமாகண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் 27 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாவீரர் நாள் நினைவுகூரப்படவுள்ள நிலையில் நல்லூர் ஆலய முன்றலில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

போரிலே உயிரிழந்த மாவீரர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் நாளை மறுநாள் திங்கட்கிழமை முதல் மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாவீரர் வாரத்தின் இறுதி நாளான 27 ஆம் நாள் நல்லூர் ஆலய முன்றலில் காலை 9. 30 மணியளவில் மாவீரர்கள் நினைவுகூரப்படவுள்ள நிலையில், மாவீரர்களின் குடும்பங்கள் மற்றும் பொது மக்கள் அன்றைய நாள் மாவீரர்களுக்கான வீரவணக்கத்தினை செலுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அங்கு ஒன்று கூட முடியாதவர்கள், வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தாம் விரும்பும் பொது இடங்களிலும் தத்தமது வீடுகளிலும் வீரவணக்கத்தினைச் செலுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உலகில் வாழும் ஈழத்தமிழர்கள் மாத்திரமன்றி அனைத்துத் தமிழர்களும், மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறந்த ஒருவரை நினைவுகூர்வது ஒவ்வொருவரினதும் உரிமை என்றும் குறிப்பிட்டுள்ள அவர், அவ்வாறு ஊயிரிழந்தவர்களை நினைவுகூர்வுதற்கு யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *