முக்கிய செய்திகள்

மாவீரர் நாளில் தமிழர் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு!

1205

மாவீரர்களைப் பூசித்து வணங்கும் திருநாளான மாவீரர்நாளில் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் என்று உரிமை கோரப்பட்டு விடுக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், ஆண்டாண்டுகாலமாக அந்நியரின் ஆக்கிரமிப்பிற்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாளாகவே நாம் மாவீரர்நாளை நினைவுகூருகின்றோம் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் புனித நாளில் தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொள்வதையும், மாவீரர்களுக்கு வணக்கம்செலுத்துவதையும் தடுத்துநிறுத்தவே தாயகத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன், மாவீரர்நாள் நிகழ்வுக்கும் தடைவிதிக்கபட்டுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் புலம்பெயர் நாடுகளில் போராளிகள் மற்றும் கிளைச்செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் வன்முறைக் கும்பல்களின் அடாவடித்தனங்களின் ஊடாக தமிழ் மக்கள் மாவீரர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் விசமிகள் ஈடுபட்டுவருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிரியின் இவ்வாறான திவலையில் சிக்கியுள்ள சிலரின் உதவியுடன் புலம்பெயர்நாடுகளிலும் எமது தேச விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக வன்முறைகளைத் தூண்டிவிட்டுள்ளதாகவும், இத்தகைய தாக்குதல்களின் ஊடாக சிலர் மாவீரர்களின் புனிதத்தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தவும் நினைப்பதாகவும், இதேபோல் புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் தேசிய ஆன்மாவைச் சிதைத்து எமது விடுதலைப் பயணத்திற்குத் தடைபோடவும் சிலர் எண்ணுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும் 27ஆம் நாள் அன்று புலம்பெயர் தேசங்களில் மாவீரர்நாள் நிகழ்வுகள் இடம்பெறுகின்ற அனைத்து மண்டபங்களிலும் நாம் அனைவரும் ஒன்றாக அணிதிரண்டு, எமது தேசம் விடுதலைபெற்று எமது மக்கள் சுதந்திரமாக தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை ஈகம்செய்த எமது மானவீரர்களை நெஞ்சப்பசுமையில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அன்பாகவும் உரிமையுடனும் எமது மக்களாகிய உங்களிடம் வேண்டிநிற்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *