முக்கிய செய்திகள்

மாவீரர் நாள் நிகழ்வுகளைக் குழப்பும் நோக்கிலேயே யாழ்ப்பாணத்தில் வன்முறைகள், கைதுகள் அரங்கேற்றப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

2022

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளைக் குழப்புவதற்காகவே யாழ்ப்பாணத்தில் வன்முறைக்குழுக்களை ஏவி விட்டு, கைது நாடகங்கள் அரங்கேற்றப்படுவதாக வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொதுமக்களை அச்சத்திற்குள் வாழ வைக்கும் போர் ஆக்கிரமிப்பாளர்களின் உத்திகளில் ஒன்றாகவே யாழ்ப்பாணத்தில் நடைபெறும் குற்றச் செயல்களை நாம் பார்க்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்து்ளளார்.

போர் முடிவுற்று விட்டது என்று அரசு அறிவித்து எட்டு ஆண்டுகள் கடக்கின்ற போதிலும், இயல்புவாழ்க்கைக்கு நாம் செல்ல பலதரப்பட்ட தடைகள் எம் முன் நிலவுகின்றன எனவும், எங்களுடைய அரசியல் அபிலாசைக்கான அடிப்படைகள் நிவர்த்திக்கப்படவில்லை என்றும், இதற்கும் மேலாக நாம் ஒரு அச்சகரமான சூழலில் தான் நடத்தப்படுகின்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

எமது சமூகத்தில் இளைஞர்களிடையே வன்முறைக் குழுக்கள் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும், அவ்வாறு ஒரு விடுதலைக்காகப் போராடும் இனத்தில், தெருச் சண்டைகளுக்கும் குற்றச்செயல்களுக்கும் வன்முறைக் குழுக்கள் உருவாவது என்பது வேதனைக்குரியது எனவும், அவ்வாறு வன்முறையை குறித்த குழுக்கள் கற்றுக்கொண்டமைக்கு, மக்களை அச்சத்திற்குள் வைத்திருக்கவேண்டும் என்ற இராணுவ புலனாய்வு அமைப்புக்களின் உத்திகளே காரணமாகவுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வன்முறைக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு நீதிமன்றங்களில் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது எனவும், அந்த வகையில் நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்புக்கள் முக்கியமானவை எனவும் தெரிவித்துள்ள அவர், யாழ்ப்பாணத்தினைப் பொறுத்தளவில் வன்முறைகளுக்கு அடிப்படையாக அரசியல் காரணங்கள் நிலவுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது கூட வாள் வீச்சு, வாள் வெட்டு என்று எமது நாகரீகத்திற்குப் பொருந்தாத குற்றங்கள் நடைபெறுகின்றன எனவும், இவை தூண்டிவிடப்பட்டமைக்கு பின்னணிகள் இருப்பதை ஊகிக்க முடிகின்றது என்றும், தமிழ் மக்கள் மாவீரர்களுக்காக நினைவுகூரல்களை மேற்கொள்ளும் இந்த வேளையில், தீடீர் என்று வன்முறைக்குழுக்களின் அட்டகாசம் தலை தூக்குகின்றது என்பது சிந்திக்க வேண்டிய விடயமே எனவும் அவர் தெரிவித்து்ளளார்.

அடிப்படையில் வன்முறைக் குழுக்களை என்ன அரசியல் தேவைக்காக உருவாக்கினார்களோ, உருவாக்கியவர்கள் அந்தத் தேவைக்காக தற்போது அவ்வாறான குழுக்களைப் பயன்படுத்தி தமது நோக்கத்தினை நிறைவேற்றுகின்றனர் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரிகின்றது எனவும் அவர் சாடியுள்ளார்.

மக்களை அச்சத்திற்குள் வைத்திருப்பதன் வாயிலாக கடந்த அரசாங்கம் மக்கள் மீதான அடக்கு முறைகளுக்கு எதிராக அவர்கள் போராடக்கூடாது என்று செயற்பட்டது எனவும், அதனை அந்த அரசாங்கம் போர்வெற்றி மமதையிலும் வெளிப்படையான இனவாதத்தின் அடிப்படையிலும் மேற்கொண்ட போதிலும், தற்போதைய நிலையில் இப் பொறுப்பினை சற்று மென்போக்கான உத்திகளுடன் இராணுவ புலனாய்வு அமைப்புக்கள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்று கருதத்தோன்றுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், மாவீரர்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக சகலதையும் அர்ப்பணித்தவர்கள் என்பதும், அவர்களின் அர்ப்பணிப்பும், ஒவ்வொரு தமிழ்மகனிடத்திலும் உணர்வு பூர்வமான உறுதியை ஏற்படுத்துகின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதை அடக்குமுறையாளர்கள் ஏற்றக்கொள்ள முடியாத பட்சத்தில் வன்முறைப் பிரயோகங்களை, ஏமாறக்கூடிய எமது இளைஞர்களை பயன்படுத்தி, வன்முறையினை கட்டவீழ்த்துவிட்டு குளிர்காய்கின்றனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும் என்னதான் அச்சம் தோற்றுவிக்கப்பட்டாலும் மக்கள் தமது கடமைகளைச் சரியாக ஆற்றவதற்குத் தயாராகவே இருக்கின்றனர் எனவும், வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *