சிறிலங்கா கடற்படைப் படகு மோதியதில், இந்திய மீனவர்கள் மூவர் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
அப்பாவி மீனவர்களின் உயிர்களைப் பறிக்கும் செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா கடற்பரப்புக்குள் எல்லை தாண்டும் மீனவர்களை எல்லையிலேயே தடுக்குமாறும், ஊடுருவும் மீனவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துமாறும் தாம் கோரி வந்தாலும், உயிரைப் பறிப்பதை அனுமதிக்க முடியாது என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, உறுதியான தகவலைக் சிறிலங்கா கடற்படையினர் விரைவில் கண்டறிய வேண்டும் எனவும், உறவுகளை இழந்து தவிக்கும் தமிழகச் சொந்தங்களுக்கும், மீனவர்களின் குடும்பத்தினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.