முக்கிய செய்திகள்

மீனவர்களின் படகுகள் எரிக்கப்படுகின்றமை தொடர்பில் காவல்துறையினர் அசமந்தமாக இருப்பதாக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது

533

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்ககோரி போரட்டம் நடாத்திய மற்றொரு மீனவரின் படகு நேற்று இரவு தாழையடி பகுதியில் எரிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தாமல் இருப்பதாக வடமராட்சி கிழக்கு தாழையடி கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடமராட்சி கிழக்குப் பகுதியில் சுமார் 1,400 வெளிமாவட்ட மீனவர்கள் அரச காணிகளில் தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் தொழிலை செய்து வருகின்ற நிலையில், இது தொடர்பாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்ததுடன், வெளிமாவட்ட மீனவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றவேண்டும் எனத் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இவ்வாறான போராட்டங்களில் பிரதானமாக பங்கெடுத்த கட்டைக்காடு பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவருடைய படகும், இயந்திரமும் நள்ளிரவில் இனந்தெரியாத நபர்களினால் ஏற்கனவே எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து 2வது சம்பவமாக நேற்று இரவு தாழையடிப் பகுதியை சேர்ந்த அருளப்பு மேரி றொபின்ஸன் என்ற மீனவருடைய படகும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கில் தங்கியிருக்கும் கடலட்டைத் தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரி, தொடர்ச்சியான போராட்டங்கள் நடாத்தப்பட்ட நிலையில், இந்தப் போராட்டங்களில் பிரதானமாக பங்கெடுத்தவர்கள் இனங்காணப்பட்டு அவர்களுடைய படகுகளே எரிக்கப்படுகின்றன என்று வடமராட்சி கிழக்கு தாழையடி கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்தவாரம் கட்டைக்காடு பகுதியில் எரிக்கப்பட்ட படகுக்குச் சொந்தக்காரரான மீனவர் கட்டைக்காடு பகுதியில் சட்டத்தை மீறி கடலட்டை பிடித்த வெளிமாவட்ட மீனவர்களை கடலில் கைது செய்திருந்தார் எனவும், அதேபோல் இப்போதும் போராட்டங்களில் பிரதான பங்கு வகித்தவர் எமது பகுதி மீனவருக்கு சொந்தமான படகும் எரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன எனவும், இந்த சம்பவம் தொடர்பாக பளையில் உள்ள காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு கொடுத்திருந்த போதிலும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படாத நிலையில், காவல்துறையினர் அசமந்தப்போக்குடன் நடந்து கொள்வதாக மீனவர் சங்கதலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *