முதலமைச்சர் விக்னேஸ்வரன் “தமிழ் மக்கள் கூட்டணி” என்ற கட்சியை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளார்

778

“தமிழ் மக்கள் கூட்டணி” என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கி உள்ளதாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் உள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்ற நிலையில்,இதில் தனது எதிர்கால அரசியல் குறித்து ஆற்றிய சிறப்பு உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடும் சவால்கள் நிறைந்திருந்த கடந்த 5 ஆண்டு காலத்தில் தன்னுடன் பணியாற்றிய சக மாகாண சபை உறுப்பினர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், தனக்கு ஆதரவு நல்கிய நண்பர்கள், தோளோடு தோள் நின்று சேவையாற்றிய தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக மாணவ மாணவியர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் பெரும் ஆதரவும் அரவணைப்பும் அளித்த தாயக மற்றும் புலம்பெயர் மக்கள் ஆகிய சகலருக்கும் தனது நன்றிகளை அவர் தனது உரையின் ஆரம்பத்தில் தெரிவித்துள்ளார்.

சிங்கள- தமிழ் இன முரண்பாட்டு நிலை அடுத்துவரும் 2019ம் ஆண்டில் 100 ஆண்டுகளை எட்டப்போகின்ற போதிலும், இந்த இன முரண்பாடானது அது தோன்றுவதற்கு காரணமான நோக்கங்கள் மற்றும் காரணிகளில் எந்தவித மாற்றமும் இன்றி தொடர்ந்துகொண்டிருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் இந்த ‘சுய பாதுகாப்பு’ போராட்டமானது ஒரு அஞ்சல் ஓட்டமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது எனவும், 2009 ஆம் ஆண்டின் பின்னர் ஒரு அரசியல் ராஜதந்திர போராட்டமாக பரிணாமம் பெற்று இன்று அது எமது கைகளை வந்தடைந்திருக்கின்ற நிலையில், ஆரம்பித்த நோக்கம் வெற்றி பெறும் வரையில் இந்த அஞ்சல் ஓட்டம் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் எனவும். இதனை வெற்றியுடன் முடிவுக்கு கொண்டுவர வேண்டிய ஒரு கடமை எமக்குண்டு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இல்லையேல் சாணக்கியமும் பொறுப்பும் ஆற்றலும் உள்ள அடுத்த தலைமுறையினரிடம் அதனை கையளிக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்கு இன்று ஏற்பட்டுள்ளது என்பதையும், இது ஒரு சுய பாதுகாப்பு போராட்டம் என்ற வகையில் இதன் அடிப்படை விடயங்களில் விட்டுக்கொடுப்பு செய்வதற்கு இந்த போராட்டத்தில் பங்குகொண்டிருக்கும் எவருக்கும் உரிமை இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த 99 வருட கால சுய பாதுகாப்பு போராட்டத்தில் 2 இலட்சத்துக்கும் அதிகமான எமது மக்களை நாம் இழந்துள்ளோம் என்பதுடன், பல ஆயிரம் உயிர்களை தியாகம் செய்துள்ளோம் எனவும், 15 இலட்சம் மக்கள் சொந்த இடங்களைவிட்டு வெளிநாடுகளுக்கு வெளியேறியுள்ளதுடன், அதைவிட பெருமளவிலான எமது பூர்வீக நிலங்களை இழந்து, கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்து நெருக்கடியான ஒரு நிலைமையில் இன்று நாம் நிற்கின்ற போதிலும் நாங்கள் சோர்வடையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2009 இல் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்த போது, தமிழ்த் தலைவர்கள் தனி நாட்டு கோரிக்கையை கைவிட்டபோது, அப்போதைய சனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு இனப்பிரச்சினையைத் தீர்த்துவைப்பதற்கான பொன்னான சந்தர்ப்பம் கிடைத்திருந்தும் அதனை அவர் பயன்படுத்த விரும்பவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘நல்லாட்சி’ அரசாங்கத்தை அமைத்த போதும் இனப்பிரச்சினையை தீர்க்கும் ஒரு அரிய சந்தர்ப்பத்தை தவிர்த்துவிட்டு, முன்னைய ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு போரின் காரணமாக அனைத்துலக ரீதியில் ஏற்பட்டிருந்த போர்க்குற்ற விசாரணை மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்படுத்தப்பட்ட முட்டுக்கட்டைகளை நீக்குவதற்கு ஏற்ற வழிவகையாகவே ‘நல்லாட்சி’ எனும் பெயரை பயன்படுத்தினார்கள் எனவும் அவர் சாடியுள்ளார்.

இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் பேரவையின் அனுசரணையுடன் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கும் நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டதாகவும். தமிழ்த் தேசிய கோட்பாடுகளின் வழிநின்று எமது இனத்தின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடுதலையை வென்றெடுத்து மேன்மையை அடைவதற்கு, மனித உரிமைகளை மதித்து நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றும் அனைவரையும் ஒரு குடையின் கீழ் சேர்க்க, இந்தக் கட்சிப் பயணம் உறுதுணையாக அமையும் என்றும், இதற்கு ‘தமிழ் மக்கள் கூட்டணி’ என்ற காரணப் பெயரை இட்டுள்ளதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *