முக்கிய செய்திகள்

முன்னாள் சிறிலங்கா கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட விரைவில் கைதுசெய்யப்படலாம் என்று கூறப்படுகிறது

693

இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில், 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கில், சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்தால், முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் வசந்த கரன்னாகொடவை கைதுசெய்ய, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் வழங்கு விசாரணைகளில், நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தலைமறைவாகி இருந்த ஹெட்டியராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியராச்சி என்ற முன்னாள் கடற்படை அதிகாரியை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் அண்மையில் கைதுசெய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் பல முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காவல்துறை பரிசோதகர் நிஷாந்த சில்வா, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் குறித்து முன்னாள் சனாதிபதியிடம் வாக்குமூலம் பெறுவது சம்பந்தமான ஆவணத்தை முன்னாள் சனாதிபதியிடம் கையளிக்க சென்ற வேளையில், கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதியில் நடந்துச் சென்றுக்கொண்டிருந்த சந்தேக நபரை கைதுசெய்தது முக்கியமான சம்பவம் என்று கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

நீதிமன்றத்தில் காவல்துறை பரிசோதகர் நிஷாந்த சில்வா சமர்பித்த அறிக்கையில், வேறு பெயர்களில் உலாவும் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு முன்னாள் கடற்படை அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

சிறிலங்கா கடற்படையினர் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளவர்கள் இந்த இரண்டு சந்தேக நபர்களா என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் குறித்த அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான தோன் நிலந்த சம்பத் முனசிங்க என்ற நபருக்கு எதிராக, முன்னாள் சிறிலஙகா கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட, கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் நாள், அன்றைய கொழும்பு மூத்த பிரதிப் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் மற்றும் அதற்கு பொறுப்புக் கூறவேண்டிய நபர்களை முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொட அறிந்திருந்தும், தனிப்பட்ட காரணம் ஒன்றுக்காக சம்பத் முனசிங்கவை இலக்கு வைத்து மாத்திரம் முறைப்பாடு செய்தமை குறித்து குற்றப் புலனாய்வு பிரிவினர் பல தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே தற்போது முப்படைகளின் தலைமை அதிகாரியாக கடமையாற்றும் முன்னாள் கடற்படை தளபதி ரவிந்திர விஜேகுணரத்ன சம்பந்தமான தனியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *