முன்னாள் யூகோஸ்லாவியாவில், இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பொஸ்னியன் சேர்பிய தலைவர் ரடோவன் கரடிக் ( Radovan Karadzic) ஆயுள்தண்டனையின் எஞ்சிய காலத்தை பிரித்தானிய சிறையில் கழிக்கவுள்ளார்.
நெதர்லாந்தில் உள்ள ஐ.நா தடுப்பு மையத்தில் இருந்து அவர், பிரித்தானியாவில் உள்ள சிறை ஒன்றுக்கு மாற்றப்படவுள்ளார் என பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் தெரிவித்துள்ளது.
75 வயதுடைய ரடோவன் கரடிக் ( Radovan Karadzic), 2016ஆம் ஆண்டில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான தீர்ப்பாயத்தினால் குற்றவாளியாக காணப்பட்டு, 40 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக அதிகரிக்கப்பட்டது.
1995ஆம் ஆண்டில் ஸ்ரெப்ரெனிக்காவில் (Srebrenica) 7 ஆயிரம் முஸ்லிம் ஆண்கணை இனப்படுகொலை செய்தமைக்கு பொறுப்பாக இருந்தார் என்று இவர் குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.
மேலும் 10 ஆயிரம் பொதுமக்கள் பீரங்கி மற்றும் குறிபார்த்துச் சுடும் தாக்குதல்களின் மூலம் படுகொலை செய்யப்பட்ட மூன்றாண்டு கால சரஜீவோ (Sarajevo) முற்றுகைக்கும், ரடோவன் கரடிக்கே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.