முக்கிய செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசின் கோரிக்கையை தமிழக அரசு மறுத்துள்ளது

491

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை தமிழக அரசு மறுத்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை நிலவியல் ரீதியாக, அமைப்பு ரீதியாக உறுதியாக உள்ளது என்றும், கடந்த ஒகஸ்ட் மாதம் 8ஆம் நாள் கண்காணிப்புக் குழு மேற்கொண்ட ஆய்விலும் 142 அடி உயரத்திற்கு தண்ணீரைத் தேக்குமளவு அணை உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது என்றும் விளக்கமளித்துள்ள தமிழக அரசு, அதனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 142 அடிக்கு தண்ணீரைத் தேக்குவதால், அணையின் பாதுகாப்புக்கு எந்த பிரச்சனையும் வராது என்றும் கூறி கேரள அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அணையின் நீர்மட்டம் 142 அடியைத் தாண்டாதபடி, நீர் வெளியேற்றப்பட்டுவருவதாகவும் இது தொடர்பாக கேரளாவில் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த கடிதத்தில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை உடனடியாக அணைக்கு மின் இணைப்பைத் தரவேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ள தமிழக அரசு, கேரள மின்வாரியத்திற்கு 1.65 கோடி ரூபாய் கட்டணமாகச் செலுத்தியிருக்கும் நிலையில், கேரள மின் வாரியம் மின்சாரம் அளிக்க மறுப்பதையும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில் அணையின் உயரத்தைத் தற்காலிகமாகக் குறைக்கக்கோரி இடுக்கியைச் சேர்ந்த தனி நபர் ஒருவரின் முறைப்பாட்டை விசாரித்துள்ள இந்திய உச்ச நீதிமன்றம், குறித்த அணையின் நீர்மட்ட உயரத்தை 139 அடிக்குக் குறைப்பது குறித்து பரிசீலிக்கும்படி கூறியுள்ளது.

அத்துடன் தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுகூடி, முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக விவாதித்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்குள் அறிக்கை கையளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *