முக்கிய செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமைக்கு அரசியல் தலைமைகள் கண்டனம்

239

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதற்கும், அங்கு நிறுவப்படவிருந்த நினைவுக்கல் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்ஈ அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்காலை சுற்றி சிறிலங்கா இராணுவமும், காவல்துறையும் குவிக்கப்பட்டிருக்க முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னங்கள் இரவோடிரவாய் அழிக்கப்பட்டிருப்பது நாகரீகமற்ற செயல் என தமிழரசுக் கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணைத் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்தச் செயலைக் கண்டிப்பதாகவும் அவர் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

அதேவேளை, இத்தகைய ஈனச் செயலை சிறிலங்கா படைகளே செய்திருப்பதாக ரெ லோ தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.

மேலும், நினைவு சின்னங்களை இடித்து அழிப்பதன் ஊடாக  தமிழர்களுடைய உணர்வுகளை அழிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நீங்கள் இடிக்கும் ஒவ்வொரு நினைவுச் சின்னமும் தமிழர்களுடைய மனங்களில் ஒரு புதிய உணர்வை ஏற்படுத்தும்..” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை,  முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்டதற்கு, சிறிலங்கா அரசின் பாதுகாப்பு தரப்பினரே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அதேவேளை, உயிரிழந்த உறவுகளை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தடுக்கும் முகமாக  சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதைக் கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களை முற்று முழுதாக அடக்கி, சிறிலங்காவில் தமிழர்கள் என்ற ஒரு இனம் இருந்ததாக ஒரு பதிவு இருக்கக் கூடாது என்ற வகையில் நீண்டகால திட்டத்தில் செயல்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *