முக்கிய செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையிடம் முறைப்பாடு

276

முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து நினைவுச்சின்னம் சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு காவல்நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பை சேர்ந்த மதகுருமார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபி இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு சேதமாக்கப்பட்டது.

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் பொது நினைவு தூபியினை அமைப்பதற்கான முயற்சிகள் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்டன.

இந்த நடவடிக்கை நேற்று இடைநிறுத்தப்பட்ட நிலையில் அங்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னம் சேதமாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு நானாட்டான் பிரதேச சபையின் இன்றைய 39ஆவது அமர்வின் போது சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி தலைமையில் இடம்பெற்ற போது அஞ்சலி செலுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *