முக்கிய செய்திகள்

முஸ்லிம்களும் தமிழ் மொழி சார்ந்தவர்களே – விக்கினேஸ்வரன்

1059

இலங்கையில் முஸ்லிம்களின் வடிவம் தமிழ் மொழி சார்புள்ளதாக இருந்தாலும், அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே தங்கள் வடிவம் மதம் சார்ந்தது என கூறிக் கொள்வதாக வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நகரில் தற்போது நடைபெற்று வருகின்ற தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழாவில் முக்கிய விருந்திராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எந்தவொரு இனமாக இருந்தாலும் அந்த இனத்தின் கலை, பண்பாடு, இலக்கியம் அனைத்திற்கும் அடிநாதமாக விளங்குவது அவர்களின் தாய் மொழி தான் என்றும், தமிழர் என்றாலும் சரி, சிங்களவர்கள் என்றாலும் சரி, மொழிதான் அந்த இனங்களின் பாரம்பரிய வடிவமாக அமைகிறது எனவும் அவர் விளக்கியுள்ளார்.

முஸ்லிம்கள் அரசியல் காரணங்களுக்காகவே தமது வடிவம் மதம் சார்ந்தது, மொழி சார்ந்தது அல்ல என்று கூறி வருகின்றனர் எனவும், கிழக்கு வாழ் முஸ்லிம்கள் தமிழ் மொழி பேசும் போதும், தமிழ் மொழியில் கவிதைகள் எழுதி பாடும் போதும் அவர்களின் கலை வடிவமும் மொழி சார்ந்தது என்று சொல்லத் தோன்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொழி பேச கற்றுக் கொண்ட பின்னர் தான் மதத்தை அறிந்து கொண்டோம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்நிலையில் முஸ்லிம் சகோதரர்களும் அடிப்படையில் தமிழ் மொழி சார்புள்ளவர்கள்தான் எனவும், தமிழ் இனத்தை இனிமேல் ஒன்றினைக்கப் போவது அரசியல் அல்ல மொழிதான் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவராக தான் செயல்படுவது தொடர்பாகவும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும், அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் தமிழர்களின் வருங்கால நிரந்தர இருப்பை உறுதிப்படுத்தும் வகையிலான பரிந்துரைகளை முன் வைப்பதையும் நோக்கமாக கொண்டுதான், பல்வேறு தரப்பின் வேண்டுகோளின் பேரில் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது என விபரித்துள்ளார்.

இந்த உருவாக்கத்திற்கு காரணமாக செயல்பட்டவர்களிடம் தெளிவுத்தன்மை காணப்படுவதாகவும், அதன் காரணமாகவே தமிழ் மக்கள் பேரவையின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் கட்சியாக எந்தக் காலத்திலும் மாற்றம் பெறக் கூடாது என்ற நிபந்தனையை ஏற்கெனவே முன்வைத்துத் தான் இந்த ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *