இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், 3 நாள் பயணமாக நாளை சிறிலங்காவுக்குச் செல்லவுள்ளார் என்று, இந்திய வெளியுறவு அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் அழைப்பின் பேரிலேயே, இந்தப் பயணம் இடம்பெறவுள்ளதாகவும், இந்திய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
இந்திய – சிறிலங்கா உடன்பாட்டுக்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாணசபைகளை ஒழிக்க வேண்டும் என சிறிலங்கா அரசின் கூட்டணி கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், அதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்துள்ள சூழ்நிலையில், ஜெய்சங்கரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் திட்டத்துக்கு, எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையிலும், இந்தப் பயணம் இடம்பெறுவது முக்கியமானது என்றும் கூறப்படுகிறது.