மெக்சிக்கோவுக்கான அதிபராக தேர்வாகியுள்ள ஆன்ட்ரஸ் மானுவலுடன், மாற்றி அமைக்கப்பட்டுள்ள வட அமெரிக்க வர்த்தக உடன்பாடு குறித்து பேச்சுகளை நடாத்தியுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் மெக்சிக்கோவின் அதிபராக தேர்வாகியுள்ள அவர், எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் நாள் உத்தியோகபூர்வமாக தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ள நிலையில், அதற்கு சற்று முன்னதாக கனேடிய பிரதமர் அவருடன் பேச்சுகளை நடாத்தியுள்ளார்.
நீண்ட இழுபறிகளுக்கு பின்னர் தற்போது இணக்கப்படு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள அமெரிக்க – மெக்சிக்கோ – கனேடிய ஒப்பந்தம் தொடர்பில் இருவரும் பேசிக்கொண்டதாகவும், குறிப்பாக இந்த ஒப்பந்தத்தை இன்னமும் பலப்படுத்தும் வகையில் முதலீடுகள் மற்றும் ஏற்றுமதிகளை அதிகரித்தல் குறித்து கலந்துரையாடியதாகவும் ஜஸ்டின் ரூடோ தகவலை வெளியிட்டுள்ளார்.
இவை தவிர கடந்த யூன் மாதத்திலிருந்து அமெரிக்காவால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்னமும் நடப்பில் இருக்கும் உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரி குறித்தும் இரு நாட்டத் தலைவர்களும் பேசிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.