முக்கிய செய்திகள்

மேலும் கால அவகாசம் வழங்குவது பொறுப்புவாய்ந்த அணுகுமுறையாக இருக்காது

38

சிறிலங்காவில், பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்கு மேலும் கால அவகாசம் வழங்குவது சாத்தியமான அல்லது பொறுப்புவாய்ந்த அணுகுமுறையாக இருக்காது என்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டை முழுமையாக ஆதரிப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பான தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னதாக, சர்வதேச மன்னிப்புச் சபையின் கீச்சகப் பக்கத்தில் இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.

அந்தப் பதிவில் மேலும்,

“சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும், அங்கு இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுவதற்கும், ஏதுவாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் பிரேரணைக்கு உறுப்புநாடுகள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.

சிறிலங்காவில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளடங்கலாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான தீவிர ஒடுக்குமுறை குறித்து அவதானம் செலுத்தியிருக்கிறோம்.

மேலும், இன மற்றும் மதரீதியான சிறுபான்மை சமூகங்களின் மீது தொடர்ந்து பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளும் எமது கரிசனைக்கு உள்ளாகியிருக்கிறது.” என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *