மேலும் பல சோமாலிய அகதிகளை மீள்குடியேற்ற உதவுமாறு கனடாவிடம் ஐ.நா வேண்டுகோள் விடுத்துள்ளது

476

ஆபிரிக்க நாடான சோமாலியாவின் மேலும் பல அதிகளை மீள்குடியேற்றுவதற்கு கனடா உதவ வேண்டும் என்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சோமாலியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில், அதனால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு கனடா உதவவேண்டும் என்று, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தின் சோமாலியாவுக்கான சிறப்பு தூதர் மொஹமட் அப்டி அஃபே (Mohamed Abdi Affey) கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வாரத்தில் ஒட்டாவாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் சோமாலியாவின் நிலவரம் குறித்து விளக்கமளித்த போதே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

சோமாலிய உள்நாட்டு போர் பத்து இலட்சத்திற்கும் அதிகமானோரை அகதிகளாக்கியுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக கென்யாவில் உள்ள அகதிகள் முகாமில் வாழ்ந்து வருவதாகவும், உலகியல் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்ற போதிலும், அந்த அகதிகளை மறந்துவிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக சிரியா, யேமன், தென் சூடான் உள்ளிட்ட நாடுகளில் இடம்பெறும் நிகழ்வுகள் மற்றும் உலகின் பல பிரச்சினைகள் காரணமாக, சோமாலிய அகதிகள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல் மறக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், கனடா போன்ற நாடுகள் மேலும் பல சோமாலிய அகதிகளை ஏற்றுக்கொள் வேண்டும் என்று அதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பு முன்வைத்துள்ள பரிந்துரையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக மருத்துவ தேவையுடையோர், கணவனை இழநத குடும்பங்கள் போன்ற, போர்ச் சூழ்நிலையில் அதிக பாதிப்பினை எதிர்நோக்குவோருக்கு உதவுமாறு அவர், கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் அஹ்மட் ஹூசெய்னிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *