மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூர் வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்

498

ஜெனிவா சென்று திரும்பிய மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூர் வானூர்தி நிலையத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினையில் தமிழக காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஜெனிவா மனித உரிமைக் மன்றத்தில் பதிவு செய்துள்ள திருமுருகன் காந்தி, அங்கிருந்து திரும்பி இன்று காலை பெங்களூர் வானூர்தி நிலையத்தை சென்றடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள மே-17 இயக்கம், தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி பெங்களூரில் கைது செய்துள்ளதாகவும், மத்தியஅரசு மற்றும் மாநில அரசின் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாகவும் அறிவித்துள்ளது.

தமிழக அரசின் இந்த கைது நடவடிக்கைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தின் பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டவர்கள் தங்களின் கண்டனங்களை வெளியிட்டுள்ளதுடன், திருமுருகன் காந்தி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

திருமுருகன் காந்தியை எந்த விதத்திலாவது நிரந்தரமாக முடக்கிவிட வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிட்டு, காவல்துறையை ஏவி அவரைக் கைது செய்வதும், குண்டர் சட்டத்தைப் பயன்படுத்துவதும் தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் வைக்கோ வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *