மைத்திரி – ரணில் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து நீக்கி புதிய ஆட்சியை அமைப்போம் – மகிந்த

980

தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வெளியேற்றி புதிய ஆட்சியை விரைவில் ஏற்படுத்தப் போவதாக இலங்கையின் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் இன்று இரத்தினபுரியில் நடாத்திய பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, ஆட்சி மாற்றமடைவதற்கு நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை என்றும், குறிப்பாக ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்திருக்கும் நாட்டு மக்கள் அதற்காக நான்கு ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளார்.

இதற்காக அனைத்து முற்போக்கு சக்திகளையும் இணைத்துக்கொண்டு எதிர்கட்சியிலுள்ள கூட்டு எதிர்கட்சி, ஆளும் காட்சியாக விரைவில் ஆட்சி பீடம் ஏறும் என்றும், இதற்கு நாடாளுமன்றிலுள்ள உறுப்பினர்களின் பெரும்பான்மைப் பலத்தை தமது பக்கம் ஈர்த்துக்கொள்வது என்பது பெரிய விடயமல்ல என்றும், தேவைப்படின் ஓரிரு நாட்களிலேயே அதனை செய்துவிடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதவேளை தற்போதய சனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவையும் கடுமையாக விமர்சித்த மகிந்த ராஜபக்ச, மைத்ரி சிறீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைத்து, சுதந்திரக் கட்சியின் தனித்துவத்தை அழித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

புதிய அரசியல் யாப்பின் ஊடாக நாட்டை பிளவுபடுத்த மைத்ரி – ரணில் அரசாங்கம் சதி செய்வதாகவும், இதற்கு இடமளிக்க முடியாது என்றும், படைவீரர்கள் தமது உயிர்களை தியாகம் செய்து ஒருங்கிணைத்த நாட்டை மீண்டும் பிளவுபடுத்த இடமளிக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ள அவர், இந்த அரசாங்கத்திற்கு எதிராக அனைவரும் அணி திரள வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது அரச சொத்துக்கள் அனைத்தையும் இந்த அரசாங்கம் விற்க முற்பட்டுள்ளது எனவும், அரச பயங்கரவாதத்தை அனைத்து தரப்புக்கும் கட்டவிழ்த்துவிட்டு அச்சுறுத்தி அவர்களை தமது கட்டு ப்பாட்டுக்குள் கொண்டுவர தற்போதய அரசாங்கம் முனைவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அது மாத்திரமன்றி காவல்த்துறை நிதி மோசடிப் பிரிவினர், பாரிய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியவற்றை பயன்படுத்தி அனைவரையும் கைதுசெய்து, விளக்கமறியலில் வைத்து மிரட்டி ஆட்சியை கொண்டுசெல்ல முற்பட்டுள்ளனர் எனவும், இதனாலேயே நாட்டு மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துமாறு தம்மை வலியுறுத்துவதாகவும், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக்கொடுக்க தான் தயாராக இருப்பதாகவும் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *