சிறிலங்காவில் கடத்தல்கள் மற்றும் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக தன்னிடம் உள்ள ஆதாரங்களை, ஜெனிவாவில் சமர்ப்பிக்கவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் தனியாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ள கண்டியைச் சேர்ந்த டீமன் ஆனந்த என்ற சிங்களவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – சுப்பிரமணியம் பூங்காவுக்கு முன்பாக, இன்று அவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.
“எதிர்கால இளைய சமுதாயத்திற்கு கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களின் உண்மைத்தன்மை தெரியப்படுத்தப்பட வேண்டும்.
தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற காணாமலாக்கப்பட்ட உறவுகள், சில காலங்களில் இறந்து விடுவார்கள்.
எதிர்கால சந்ததியினருக்கு எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டார்கள், எதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டும்
படுகொலைகள் மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தற்போது நாடாளுமன்றம் போன்றவற்றில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
அவர்களை கைது செய்ய வேண்டும். அதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறிலங்காவில் உள்ள அனைத்து மக்களுக்கும் உண்மை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே நான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.