புரவி புயல் மற்றும் தொடர் மழையினால், யாழ்ப்பாண மாவட்டத்தில் 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிந்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவு வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின்படி, இந்த அனர்த்தங்களினால், 21 ஆயிரத்து 884 குடும்பங்களை சேர்ந்த 72 ஆயிரத்து 410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 42 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், அங்கு 111 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 841 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
66 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 886 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, புரெவி புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து நீடிக்கும் சீரற்ற காலநிலையினால், கிளிநொச்சி மாவட்டத்தில் 1,846 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில், மூன்று வீடுகள் முழுமையாகவும், 273 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
88 குடும்பங்களைச் சேர்ந்த 134 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.