முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சிறு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன

432

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்த மூன்று பகுதிகளிலுள்ள காணித் தொகுதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.

மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் இதற்கான காணிப் பத்திரங்கள், யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியினால், மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாகனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மயிலிட்டி கலைமகள் வித்தியாலயமும், ஆணைக்கோட்டை கூலாவடி பகுதியிலுள்ள படை முகாமொன்றும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், பலாலி குரும்பசிட்டி பகுதியிலுள்ள பொதுநூலகம் மற்றும் பாலர் பாடசாலை உள்ளிட்ட கட்டடத் தொகுதியும் விடுவிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மயிலிட்டிக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருந்த சனாதிபதி மைத்திரிபால சிறிசேன மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்தையும் அதனை அண்டிய பகுதிகளையும் விரைவில் விடுவிப்பதாக உறுதியளித்திருந்தார்.

அதற்கமைய தற்போது குறித்த காணித் தொகுதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், வெறும் பாடசாலை வளாகம் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலையினை சுற்றியுள்ள நிலப்பரப்பு மற்றும் அருகிலுள்ள இராணுவ முகாம்கள் எவையுமே இன்னும் அகற்றப்படவில்லை.

இதனிடையே விடுவிக்கப்பட்ட பாடசாலை வளவில் ஏற்கனவே படையினர் நிறுவிய புத்தர் சிலை ஒன்று அப்படியே இருக்க விடப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடேஸ்வராக்கல்லூரியை சூழ படைமுகாம்கள் உள்ள நிலையில், தற்போது விடுவிக்கப்பட்ட மயிலிட்டி தெற்கு கலைமகள் மகாவித்தியாலயத்தை சூழ படைமுகாம்களை பேண படைத்தலைமை முற்படுகின்றமை தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறான படைமுகாம்களின் மத்தியில் மாணவர்கள் சுமூகமாக கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடமுடியுமா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *