யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களிலும் இன்று வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

482

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் இன்று வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் கொக்குவில், இணுவில் மற்றும் தாவடி ஆகிய இடங்களில் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவங்கள் இன்று புதன்கிழமை மாலை 3.45 மணி தொடக்கம் 4.30 மணிக்குள் 45 நிமிடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன என்றும், இலக்கத்தகடுகள் அற்ற 3 உந்துருளிகளில் வந்த 9 பேர் கொண்ட கும்பலே இந்த அட்டூழியங்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி வீதி மற்றும் தொடரூந்து நிலையத்தடியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த கும்பல், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதுடன், உடமைகளைச் சேதப்படுத்திவிட்டு தப்பித்துள்ளது.

அங்குள்ள இரண்டு வீடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களை அச்சுறுத்தும் வகையிலேயே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் கூறப்படுகிறது.

அத்துடன் இணுவில் சந்திக்கு அண்மையாகவுள்ள தேனீர் கடை மற்றும் வாகன திருத்தகம் என்பன தாக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து தாவடி பாடசாலை வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த கும்பல், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட நிலையில், இணுவில் மற்றும் தாவடிப் பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களின்போது சேதமாக்கப்பட்டவை ஆவா குழுவைச் சேர்ந்தவர்களின் உறவினர்களுடைய உடமைகள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அச்சத்தில் வீட்டினுள்ளேயே முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *