முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய 5 காவற்துறையினரும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்.

1461

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சுடப்பட்ட கொக்குவில், குளப்பிட்டிப் பகுதிக்கு, துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள 5 காவல்த்துறையினரும் இன்று புதன்கிழமை  சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு  விவரத்தை அங்கு வைத்து வழங்கியுள்ளனர்.

அவர்கள் நின்று சுட்ட இடமான குளப்பிட்டிச் சந்தையின் முன்பகுதி, மற்றும் மாணவர்கள் வீழ்ந்து, சடலமாக மீட்கப்பட்ட கடையின் முன்பக்கம் வரையிலும் இவர்கள் சரியாக அடையாளங் காட்டியுள்ளனர்.

அவர்கள் காட்டிய அடையாளங்களின் அடிப்படையில், நின்று சுட்டதாகக் கூறப்பட்ட இடத்தில், தடயவியல் காவல்த்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், வெற்றுத் தோட்டா ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு காவல்த்துறையினர், விசேட அதிரடிப் படையினர் ஆகியோர் இந்த 5 காவல்த்துறையினரையும் பாதுகாப்பாக சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து, மீண்டும் அழைத்துச் சென்றுள்ளனர்.

கடந்த 21ஆம் நாள் அதிகாலை கொக்குவில், குளப்பிட்டிப் பகுதியில் காவல்த்துறையால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3ஆம் ஆண்டில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன், சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஸன்  ஆகிய மாணவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து யாழ்ப்பாண காவல் நிலையத்தைச் சேர்ந்த 5 காவல்த்துறையினர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த  ஐந்து காவல்த்துறையினருமே இன்று சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

அழைத்து வரப்பட்ட ஐந்து சந்தேகநபர்களில் ஒருவர் மாத்திரம் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு, அனைத்தையும் அடையாளங் காட்டியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவல்த்துறையின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டமை தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்த தகவல்களை வெளியிட வேண்டாம் என அதிகாரிகளுக்கு காவல்த்துறைத் திணைக்களம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை கொக்குவில் பகுதியில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவல்த்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் மற்றும் அதனையடுத்து இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், பல குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே இந்த விசாரணைகள் தொடர்பான எந்த தகவல்களையும் ஊடகங்களுக்குப் பகிர வேண்டாம் என்று காவல்த்துறைத் திணைக்களம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக காவல்த்துறையின் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *