முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் இன்று புதன்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்

1365

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் இன்று புதன்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம, 21ஆம் நாள் அதிகாலை, கொக்குவில், குளப்பிட்டிப் பகுதியில் காவல்த்துறையால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான நடராசா கஜன், விஜயகுமார் சுலக்ஸன் ஆகியோர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை மாணவர்கள் புறக்கணித்து வந்த நிலையில், மாணவர்களும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரும் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

ஒரு வார காலத்துக்குள் விசாரணை அறிக்கையின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைப்பதாகவும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதாகவும் மைத்திரிபால சிறிசேன இதன்போது உறுதியளித்தார்.

இருந்தபோதிலும், சனாதிபதியின் உறுதிமொழிகள் தொடர்பில் சக மாணவர்களுடனும் கலந்துரையாடிய பின்னரே கல்விச் செயற்பாடுகளை தொடர்வது அல்லது தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுதல் ஆகிய முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனறு இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட மாணவப் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்டதனை அடுத்து, அவர்கள் மீண்டும் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதுடன், பல்கலைக்கழக செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *