யாழ் கோட்டையை இராணுவத்திற்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படக் கூடாது என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

286

யாழ் ஒல்லாந்தர் கோட்டையை சிறிலங்கா இராணுவத்திற்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படக் கூடாது என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது கோட்டையில் தங்கியுள்ள இராணுவம் முற்றாக வெளியேறுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று இணைத் தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பனர்களான மாவை சேனாதிராஜா, விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது இடம்பெற்ற தொல்லியல் விடயம் மீதான விவாதத்தின்போது, யாழ் ஒல்லாந்தர் கோட்டையில் இராணுவத்தினருக்கு இடம் வழங்கும் விடயம் தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர் உரிய அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ் துரையப்பா விளையாட்டரங்கின் புனரமைப்பின் போது பாரிய இடையூறுகளை விளைவித்த தொல்லியல் திணைக்களம், தற்போது கோட்டைக்குள் இராணுவம் முகாம் அமைப்பதை எவ்வாறு அனுமதித்தது என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த தொல்பொருள் திணைக்களம் சார்பில் பிரசன்னமாகியிருந்த அதிகாரி, ஏற்கனவே இராணி கோட்டையில் இருபதிற்கு மேற்பட்ட இராணுத்தினர் தங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது இராணி கோட்டையினை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதனால், குறித்த இரணுவத்தினர் தங்குவதற்கென சிறிய அளவான தற்காலிக கொட்டகை அமைக்கும் பணிகளே மேற்கொள்ளப்படுவதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கோட்டையில் எவ்வித இராணுவமும் தங்குவதை அனுமதிக்க முடியாது என்று வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்ததுடன், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் வரை அங்கு காவல்துறையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்துவதுமாறும், புனரமைப்பு நிறைவடைந்த பின்னர் காவல்துறையினரும் வெளியேறி கோட்டை முழுமையாக தொல்லியல் திணைக்களத்தின்கீழ் கொண்டுவர தீர்மானம் எடுக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதனை இணைத்தலைவர்கள் ஏற்றுக் கொண்டதுடன் இவ்விடயம் தொடர்பில் மத்திய அரசிற்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *