யாழ் போதனா வைத்தியசாலையில் அடுத்த மாதம் முதல் அவசர சிகிச்சைப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட உள்ளது

368

யாழ் போதனா வைத்தியசாலையில் அடுத்த மாதம் முதல் அவசர சிகிச்சைப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்றைய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது சுகாதாரம் குறித்த விடயம் எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் கருத்து தெரிவிக்கையிலையே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு அடுத்த மாதம் 17 ஆம் நாள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது எனவும், அதற்கு மேலாக புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற கட்டிடத்துடன் அதனை நான்குமாடியாக அமைப்பதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடக்கப்பட்டுள்ளது எனவும், இதற்காக 200 மில்லியன் ருபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர் வைத்தியசாலை அமைக்க தேவையான நிதியை நெதர்லாந்து நாட்டின் நிறுவனம் ஒன்றிடம் இருந்து பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகள், கொழும்பு சுகாதார அமைச்சின் ஊடாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சிறுவர் வைத்தியசாலை அமைக்க 50 மில்லியன் ரூபா தேவையாகவுள்ளது எனவும், வைத்தியசாலைக்கான வரைபடம் தயாரிக்கப்பட்டு விட்டதாகவும், இந்த வைத்தியசாலையை அமைப்பதற்கு நெதர்லாந்து நாட்டின் நிறுவனம் ஒன்றிடம் கடன் பெறுவது தொடர்பாக கொழும்பு சுகாதார அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது தொடர்பான சகல விடயங்களும் கொழும்பு சுகாதார அமைச்சின் ஊடாக அந்த நாட்டு நிறுவனத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் அரியாலைப் பகுதியில் தனியார் ஒருவர் வைத்தியசாலைக்காக இரண்டு ஏக்கர் காணியை அன்பளிப்புச் செய்துள்ளார் எனவும், அந்தக் காணியில் கண் வைத்தியசாலையை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *