முக்கிய செய்திகள்

யாழ். மாவட்டத்தில் இன்னமும் 4,000ஏக்கர் காணிகள் சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் உள்ளதாக மாவடடச் செயலர் தகவல் வெளியிட்டுள்ளார்

527

யாழ். மாவட்டத்தில் 4,000 ஏக்கர் காணிகள் இன்னமும் இராணுவத்தின் பிடியில் உள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் இதுவரையும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுடைய தனியார்கள் காணிகளின் அறிக்கை வெளியிடும் ஊடகவியாளர்கள் சந்திப்பு, யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற வேளையில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் இன்று வரையான காலப்பகுதியில் 9,818 ஏக்கர் தனியார் காணிகள் இராணுவத்திடம் இருந்து பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 2014 ஆம் ஆண்டு வரை 5,980 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், 2014 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 3,838 காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இன்னமும் 4,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாகவும், இதுகுறித்த விபரங்கள் இலங்கை சனாதிபதி மற்றும் பிரதமர், மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோர்களிடம் அறிக்கை ஊடாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் அரச காணிகள் மிக குறைவாகத் தான் உள்ளது எனவும், 99 வீதமான காணிகள் தனியாரின் காணிகளே என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் யாழ் மாவடடத்தில் இன்னமும் 541 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களில் வசிக்கின்றனர் எனவும், காணிகள் இல்லதாவர்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுக்க மீள்குடியேற்ற அமைச்சிடம் உள்ள திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகவும், இந்தத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கையினை மாவட்ட செயலகம் முன்னெடுக்கும் என்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *