முக்கிய செய்திகள்

யாழ். மாவட்டத்தில் இலங்கையின் 42 வது தேசிய விளையாட்டு விழா நடத்தப்படுகின்றமை சாதாரண விடயமல்ல – இரா சம்பந்தன்

1083

யாழ். மாவட்டத்தில் இலங்கையின் 42 வது தேசிய விளையாட்டு விழா நடத்தப்படுகின்றமை சாதாரண விடயமல்ல எனவும், அதனைச் சாதாரண விடமாக தாங்கள் பார்க்கவில்லை என்றும் எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகெர்ணடு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், இலங்கையில் உருவாகியிருக்கும் மாற்றத்தை, நாட்டை ஆட்சி செய்பவர்களின் மனங்களில், சிந்தனைகளில் உருவாகியிருக்கும் பாரிய மாற்றத்தை இந்த விளையாட்டு நிகழ்வு காட்டுவதாகவும், நல்லிணக்கம், புரிந்துணர்வு, இன ஒற்றுமை, சமரசம் ஊடாக சமாதானம் உண்டாக்கப்பட வேண்டும் என ஆட்சியாளர்கள் சிந்திப்பதாலேயே தேசிய விளையாட்டு விழா யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சுதந்திரம் பெற்றபோதும் அந்த சுதந்திரத்தை பெரும்பான்மை மக்களே அனுபவிக்கிறார்கள் எனவும், மற்றய சிறுபான்மை மக்கள் அதனை அனுபவிக்கவில்லை என்றும், சகல இனங்களும், சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்கவில்லை என்பதே, அவ்வாறு சிறுபான்மை இனங்கள் அவற்றைப் பெற முடியாமல் போனமைக்கு பிரதானமான காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் முதலாவது அரசியல் சாசனத்தை ஆங்கிலேயர்கள் உருவாக்கியதாகவும், அதற்குப் பின்னர் தனிப்பட்ட அரசியல் கட்சி அரசியல் சாசனத்தை உருவாக்கியதனால் மக்களை ஒற்றுமைபடுத்த முடியவில்லை எனவும் தெரிவித்துள்ள அவர், ஆனால் தற்போது நிலைமை அவ்வாறில்லை எனவும், 2 பிரதான கட்சிகள் நாட்டை ஆட்சி செய்வதுடன், புதிய அரசியல் சாசனத்தையும் உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமரச அடிப்படையில், மக்கள் அனைவரும் சுதந்திரத்திற்கு உரித்துடையவர்கள் என்ற அடிப்படையில், அதிகார பகிர்வு, பகிரப்பட்ட இறமை அடிப்படையில் ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்கி வருவதாகவும், அதற்கு தாங்களும் முடிந்த ஒத்தாசையை வழங்கிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் யாழ்.மாவட்டத்தில் தேசிய விளையாட்டு விழா முதல் தடவையாக நடைபெறுகின்றமை சாதாரணமான விடயமல்ல எனவும், இந்த தேசிய விழாவை சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடாத்திய விளையாட்டுதுறை அமைச்சர், பிரதி அமைச்சர் அதிகாரிகள் அனைவருக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கவேண்டியது தமது கடமை எனவும் இரா சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *