முக்கிய செய்திகள்

ரணிலுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு 10 பேராக குறைக்கப்பட்டுள்ள நிலையில், அலரி மாளிகையில் பதற்றம் அதிகரித்துள்ளது

316

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 10 ஆக குறைக்க, காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள மேலதிக பாதுகாப்பை விலக்கிக் கொள்ளுமாறும், அவருக்கான பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை, 10 பேராக குறைக்குமாறும், காவல்துறை மா அதிபர் நேற்று மாலை, பிரதமர் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான, பிரதி காவல்துறை மா அதிபர் ஜெயந்த விக்ரமசிங்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அவசர கதியில் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துமாறும், அதுபற்றி தனக்கு அறிவிக்குமாறும் காவல்துறை மா அதிபர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் அறிவித்துள்ளதனால், ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பாதுகாப்புப் பிரிவு மற்றும் சிறப்பு அதிரடிப்படை மூலம் வழங்கப்பட்டுள்ள மேலதிக பாதுகாப்பை நீக்குமாறும், அவருக்கு 10 பாதுகாப்பு அதிகாரிகள் போதும் என்றும் காவல்துறை மா அதிபர் தனது உத்தரவில் கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்காக 1008 பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் இருந்த நிலையில், அவர்களின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்பட்டுள்ளதுடன். சிறப்பு அதிரடிப்படையினர் முற்றிலுமாக விலக்கப்பட்டு, தனியே அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினர் மாத்திரம் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றம் கூட்டப்படும் வரையில் ரணில் விக்ரமசிங்கவின் பிரதமருக்கான சிறப்புரிமைகளை உறுதி செய்யுமாறு, இலங்கை அதிபருக்கு, சபாநாயகர் நேற்று கடிதம் அனுப்பியிருந்த நிலையிலும் கூட, பாதுகாப்பை குறைக்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையை விட்டு வெளியேற்றப் போவதாக கூட்டு எதிரணியினர் மிரட்டி வரும் சூழலில், அவரது பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் தொடர்ந்தும் அலரி மாளிகையில் குவிந்துள்ளதுடன், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அங்கேயே தங்கியுள்ளனர்.

இதற்கிடையே, அலரி மாளிகையில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை அகற்றுவதற்கு தாங்கள், பலத்தைப் பிரயோகிக்கப் போவதில்லை என்று இலங்கைவின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *