ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்தாழும் தந்திரத்துக்கு பலிக்கடாவாக மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற கேப்பாப்பிலவு மக்கள் சூழுரைத்துள்ளனர்.

1138

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்து ஆளும் தந்திரத்துக்கு தாங்கள் ஒருபோதும் பலிக்கடாவாக போவதில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற கேப்பாப்பிலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள தமது நிலங்களை விடுவிக்ககோரி, படை முகாமுக்கு முன்பாக கேப்பாப்பிலவு மக்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 51ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

கேப்பாப்பிலவு மக்களின் காணிகள் பகுதியளவில் விடுவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், தங்களது காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதே தமது கோரிக்கை எனவும், அவ்வாறு முழுமையாக விடுவிக்கப்படாது விட்டால் போராட்டம் தொடரும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சிறிலங்கா படையினர் வசமிருக்கின்ற காணிகளை விடுவிக்குமாறு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து போராட்டத்தை மேற்கொள்கின்ற போது, எம்மிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு பல சதி முயற்சிகள் நடைபெறுகின்றன என்றும் அந்த மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தங்களிடையே பிரிவை ஏற்படுத்தும்நோக்கில் நிலங்கள் பகுதி பகுதியாக விடுவிக்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க சொல்லியிருக்கலாம் என்ற போதிலும், அவரின் பிரித்தாழும் தந்திரோபாயத்துக்கு தாங்கள் ஒரு போதும் பலிக்கடாவாக போவதில்லை எனவும், தங்களது ஒருமித்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை தொடர்ந்து போராட்டத்தை மேற்கொள்ளதாகவும் அந்த மக்கள் சூழுரைத்துள்ளனர்.

இதேவேளை தங்கள் காணிகளில் சிறிலங்கா இராணுவத்தினர் சொகுசாக இருக்கின்றனர் எனவும், காணிகளை விடுவிப்பார்கள் என்பதில் நம்பிக்கை குறைவாகவே உள்ளது எனவும், கேப்பாபிலவு இராணுவ முகாம் காணிகளைப் பார்வையிட்ட பின்னர் அப்பகுதி மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இன்று காணி களை விடுவிப்பார்கள் என்றே எதிர்பார்த்த போதிலும், ஏமாற்றமே எஞ்சியுள்ளதாகவும், போராடாமல் இருந்திருந்தால், ஜென்மத்துக்கும் காணிக்குள்ளே சென்றிருக்கவே முடியாது எனவும் தெரிவித்துள்ள அவர்கள், தங்களது காணிகள் அடையாளம் காண முடியாதவாறு இராணுவத்தினரால் உருமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், வீடுகள், கட்டடங்கள், தேவாலயம் எல்லாம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அங்கு சிறிலங்கா இராணுவத்தினர் சொகுசாக – ஆடம்பரமாகக் கட்டடங்களைக் கட்டியுள்ளதாகவும், மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த இடங்களிலேயே அப்படியான கட்டடங்கள் இருக்கின்ற நிலையில், அதனை அவர்கள் விடுவிப்பார்கள் என்று சொல்லமுடியாது எனவும், காணிகள் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கு குறைவாகவே உள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *