முக்கிய செய்திகள்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றிருந்த ஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது

387

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, 161வது பிரிவின் கீழ் இந்த நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

சிறையில் உள்ள ராஜீவ் கொலையாளிகள் விவகாரத்தில் 161வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆறாம் தேதியன்று தீர்ப்பளித்ததையடுத்து, இவர்கள் எழுவரையும் விடுதலைசெய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுவடைந்தன.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக தமிழக அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் மாலை 4.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் துவங்கியதுடன், சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு மாநில மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள் என்பதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பேரறிவாளன் என்பவரின் கருணை மனுவை 161வது பிரிவின் கீழ் பரிசீலிக்கலாம் என்று உத்தரவிட்டிருந்த போதிலும், இவர்களைத் தவிர மீதமுள்ள ஆறு நபர்களும் அரசுக்கு மனு அளித்திருந்தனர் எனவும், அதைக் கருத்தில் கொண்டு, 7 பேரையும் முன்விடுதலை செய்ய மேதகு ஆளுநருக்கு மேற்படி சட்டப்பிரிவின் கீழ் பரிந்துரைசெய்ய அமைச்சரவையில் முடிவுசெய்யப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட உச்ச நீதிமன்றமே 161வது பிரிவின் கீழ் முடிவெடுக்கலாம் என்று சொல்லிவிட்ட நிலையில், இன்று அமைச்சரவையைக் கூட்டி இந்தத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாக ஜெயக்குமார் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்தப் பரிந்துரை ஆளுநருக்கு உடனடியாக அனுப்பப்படுமெனவும் அமைச்சர் பதிலளித்தார். இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் கருதியே ஞாயிற்றுக் கிழமையன்று இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாகவும் எந்தத் தாமதமுமின்றி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *